பெண்கள் விளையாட்டில் பங்கு கொள்ளும்போது அதிக நன்மைகளைப் பெற முடியும்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக இந்தியச் சமூகங்களில் பெண்களுக்கான வாழ்வியல் முறைகளில் இருந்து விளையாட்டு பெரும்பாலும் தள்ளி வைக்கப்படுகிறது. அரிதாகவே பெண்கள் விளையாட்டில் பங்குபெறுவது, தனது வாழ்நாள் முழுவதும் விளையாட்டைத் தொடர்வது போன்ற நடைமுறைகள் காணப்படுகின்றன. விளையாட்டில் பங்கு பெறும் சிலரும் திருமணத்திற்குப் பிறகு பல காரணங்களுக்காக விளையாட்டில் இருந்து விலகிவிடுகின்றனர்.
படிக்கிற வயதில் குழந்தைகள் விளையாட்டில் கவனம் செலுத்தும்போது கல்வியில் சிறந்து விளங்க முடியாது என்ற எண்ணத்திலும், குழந்தைகளின் விளையாட்டினைப் பெற்றோர்கள் தடை செய்கின்றனர். சிறு வயதில் விளையாட்டுத்துறையில் பங்கு பெற்றாலும் பொதுத்தேர்வு முறையினைக் காரணம் காட்டி இளம்பருவத்தினை எட்டும்போது குழந்தைகளை விளையாடுவதில் இருந்து விலக்கிவிடுகின்றனர். இதில் பெண் குழந்தைகளுக்கான விதிமுறைகள் இன்னும் பலமாகவே கட்டப்படுகின்றன.
விளையாட்டில் பங்குபெறும் சிறுமிகள் பள்ளியில் சிறந்து விளங்குகின்றனர். மேலும் படித்து பட்டம் பெற்றவர்களை விட பட்டம் பெறுவதற்கான உத்வேகமும் ஒருமுகப்பட்ட சிந்தனையும் விளையாட்டில் பங்குபெறும் பெண் குழந்தைகளிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு அடிப்படைக்காரணம் – உடற்பயிற்சி செய்யும் போது கற்றல் திறன், நினைவாற்றல், மனதிற்குள் உங்வாங்கிய செய்திகளை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளல் போன்ற திறன்கள் மேம்பட்டுக் காணப்படுகின்றன. சிறுவயதில் விளையாட்டில் பங்குபெறும் பெண்குழந்தைகளிடம் அதி வேகம் மற்றும் உந்துதலை ஏற்படுத்தி அவர்களின் திறனை அதிகரிக்கின்றன.
விளையாட்டில் பங்குகொள்ளும் பெண்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக உருவாகின்றனர். தன்னம்பிக்கை மேம்பட்டு இருக்கும்போது பெண் குழந்தைகளிடம் இயல்பாகவே நம்பிக்கை மேம்பட்டுக் காணப்படும். எனவே தனித்து விளங்குவதற்கான சாத்தியங்கள் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. மேலும் இறுக்கமான மன நிலையிலிருந்து குழந்தைகளை மீட்டு மகிழ்ச்சியான தோழிகள் வட்டத்தினை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக விளையாட்டு அமைகிறது.
கத்தோலிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான சாண்ட்ரா ஹான்சன் மற்றும் ரேபேக்கா இருவரும் விளையாட்டினைக் குறித்துக் கருத்துக் கூறுகையில் ஆண் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறனின் மூலமாக நெருக்கமான நண்பர்கள் வட்டத்தினை உருவாக்கி விடுகின்றனர். இது பெண்களிடம் காணப்படுகின்ற தொடர்பு வட்டத்தினை விட பெரிதாகவும் நெருங்கிய நட்பு முறையிலும் அமைந்து விடுவதற்கு விளையாட்டு சாதனைகளே அடிப்படையாக அமைகிறது. இந்த வகையான குழுக்களைக் கண்டு இளம் பெண்கள் தங்களையும் அதில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விருப்பம் கொள்கினறனர். இதற்கு விளையாட்டு ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது.
விளையாட்டு என்பது தொடர்புக்குப் பயன்படும் முக்கிய செயலாக இருக்கிறது என்பதால் பெண்கள் தங்களின் வாழ்வியல் முறைகளில் விளையாட்டினை அத்யாவசியக் கூறாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையினை உடையது ஆகும்.
விளையாட்டுப் பயிற்சியானது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, பெண்களை வலிமையானவர்களாக மாற்றிவிடுகிறது எனலாம். விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் குறைந்து காணப்படுகின்றன. மேலும் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. விளையாட்டில் ஈடுபடும் பெண்களின் மன நிலையும் மேம்பட்டுக் காணப்படுகிறது. புகைப்பிடித்தல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் போன்ற செயல்பாடுகளில் இருந்தும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விளையாட்டு பயன்படுகிறது எனலாம்.
விளையாட்டில் பங்குபெறும் பெண்கள் நிர்வாகம் தொடர்பான வேலைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. சிறுவயது மற்றும் இளம் பிராயத்தில் பள்ளிகளில் விளையாட்டில் ஈடுபட்ட பெண்களிடம் இயல்பாகவே தலைமைத்துவக் குணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. விளையாட்டில் ஈடுபடும்போது குழுவாகச் செயல்படும் தன்மை இங்கு விடாமுயற்சியுடன் பணியாற்றவும் உதவியாக அமைகிறது.
நாம் சமத்துவத்தை எதிர்ப்பார்க்கும் உலகச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் இருபாலினத்தவர்களும் விளையாட்டிலும் சமமாகவே நடத்தப்படவேண்டும். இந்தியளவில் பி.டி. உஷா, சானியா மிர்சா, சாய்னா நேவால் போன்றோர் அவர்களது விளையாட்டில் சிறந்து விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வாழ்வியலுடன் தொடர்புடைய ஒரு முக்கியக் காரணி என்பதால் பெண்கள் ஒரங்கட்டப்படும் வாழ்வியலிலிருந்து தப்பிக்க, சமத்துவ வாய்ப்புக்களை நோக்கி பயணிக்க வேண்டும். ஆண், பெண் என்ற பாகுபாட்டிலிருந்து சமத்துவ பயணம் தொடங்குவதற்கு கண்டிப்பாக பெண்கள் விளையாட வேண்டும். உறுதியான பெண்களை விளையாட்டு உருவாக்கும் என்பதாலும் அதனை வாழ்வியலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments