ரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா??? சுவாரசியத் தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,September 22 2020]
பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன ரஃபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. இந்தியப் பாதுகாப்புத் துறையைப் பொறுத்த வரையில் இந்த போர் விமானங்கள் மிகவும் சிறப்பான விஷயமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தியா 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக கடந்த ஜுலை மாதத்தில் 5 விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 5 விமானங்களை பிரான்ஸ் நாட்டின் விமான ஓடுதளத்தில் வைத்து இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் இருக்கும் ரஃபேல் ரக போர் விமானங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காரணம் இந்தவகை விமானங்களில் அதிநவீன இயந்திரங்களும், எதிரிகளைத் திட்டமிட்டு தாக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தவகை விமானங்களை இயக்குவதற்கு தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறப்படும் நிலையில் தற்போது பெண் விமானி ஒருவர் இந்த விமானத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பாதுகாப்பு கருதி அந்த பெண் விமானியின் பெயர் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 இல் முதன்முதலாக பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை இந்தியாவில் 10 பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்கி வருகின்றனர். மேலும் எம்ஐஜி 21 ரக விமானத்தையும் ஒரு பெண் விமானி இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது பெண் விமானி ஒருவருக்கு ரஃபேல் விமானத்தையும் இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத்தவிர புதிதாக 2 பெண் விமானிகள் போர்க் கப்பலை இயக்கவும் இந்திய பாதுகாப்புத் துறை அனுமதி வழங்கியிருக்கிறது. ரிதி சிங், குமதினி தியாகி எனப்படும் 2 பெண் விமானிகளும் தற்போது போர்க் கப்பலில் இருக்கும் ஹெலிகாப்டரை இயக்கும் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். இந்தத் தகவலையும் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.