உயிரோடு எரித்து கொல்லப்பட்ட பெண் டாக்டர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,November 29 2019]
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் நேற்று இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண், கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து கால்நடை மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் தினமும் செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை பணி முடிந்ததும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நடுவழியில் நின்றது. இதனையடுத்து சாலையில் சென்ற இருவர் அவருக்கு உதவி செய்ததாக தெரிகிறது.
அப்போது பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி தனது சகோதரி பாவியா ரெட்டிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு தனது இருசக்கர வாகனம் பழுதாகி விட்டதாகவும், தனக்கு இரண்டு பேர் தனக்கு உதவி செய்ததாகவும் கூறினார். மேலும் அவரது சகோதரி பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது
இந்த நிலையில் சிறிது நேரத்தில் பிரியங்கா ரெட்டி மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனதால் பதட்டம் அடைந்த அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காவல்துறையினர் பிரியங்கா ரெட்டி குறிப்பிட்ட இடத்தை சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே பிரியங்கா ரெட்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூர்-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் பால்காரர் ஒருவர் கொடுத்த தகவலின்படி ஒரு பிணம் எரிந்த நிலையில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பிரியங்காவின் குடும்பத்தினரை போலீசார் தொடர்புகொண்டு உடலை அடையாளம் காட்ட அழைத்தனர். எரிந்த நிலையில் இருந்த பிணத்தின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை வைத்து அவர் பிரியங்கா ரெட்டி தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து பிரியங்காவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத சோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும். இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.