ஆன்லைன் பேமண்ட்டுக்கு No… அட்மிஷன் போடாமலே உயிரைவிட்ட கொரோனா நோயாளி!
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஞ்சலி எனும் பெண்ணை அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அட்மிஷனுக்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனச் சொல்ல, உறவினர்களும் ஆன்லைனில் பணத்தை செலுத்த முன்வந்தனர். ஆனால் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் பணத்தை ரொக்கமாகக் கேட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியை மருத்துவமனையின் வாயிலிலேயே விட்டுவிட்டு பணத்தைத் திரட்டுவதற்காக வெளியே சென்றுள்ளனர். இப்படி 3 மணிநேரம் கழித்து திரும்பிவந்து பார்த்தபோது அந்த பெண்மணி மருத்துவமனை வாயிலிலேயே உயிரிழந்து உள்ளார். இதனால் அவரது உடலை அகற்றுமாறு மருத்துவமனை நிர்வாகம் அதட்டியுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்த அஞ்சலியின் உடலை அகற்றுவதற்கு உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். ஆனால் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் அவ்வழியாகச் சென்ற இரு செய்தியாளர்கள் உதவ முன்வந்ததை அடுத்து அஞ்சலியின் உடல் அப்புறப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கொரோனா சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் அட்மிஷனுக்கு பணம் கேட்டதோடு அதை ரொக்கமாகத்தான் கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்புக் காட்டி இருக்கிறது. இதனால் 3 மணிநேரம் காத்திருப்புக்கு பின் அந்த நோயாளி மருத்துவமனை வாயிலிலேயே உயிரிழந்து உள்ளார். இந்தச் சம்பவம் ஆந்திரா பகுதியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.