மலை உச்சியில் இருந்து இளம்பெண் எடுத்த செல்பி… அதற்குப்பின் நடந்த சோகச் சம்பவம்!
- IndiaGlitz, [Friday,November 06 2020]
செல்பி மோகம் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டுபோய் விட்டு விடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மலைப்பாங்கான சுற்றுலா பகுதியில் இருந்து செல்பி எடுத்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இச்சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டம் ஜாம் சேட் பகுதியில் மலைப்பாங்கான சுற்றுலா தளம் உள்ளது. இந்த சுற்றுலாத தளத்திற்கு நேற்று குடும்பத்துடன் சென்ற இளம்பெண் மலை உச்சியில் இருந்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்படி செல்பி எடுத்தபோது நிலை தடுமாறி மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார். பள்ளத்தாக்கில் உயிரிழந்த அவரை பேரிடர் மீட்புக்குழுவினர் 4 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்டு உள்ளனர்.
மலை உச்சியில் இருந்து வேகமாக விழுந்ததால் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் கடுமையான காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் முட்புதருக்கு இடையில் உடல் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த அந்தப் பெண் இந்தூர் பகுதியைச் சார்ந்த நீது மகேஷ்வரி எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவரின் உயிரிழப்பால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அச்சம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.