கைக்குழந்தையுடன் கணவர் வீட்டின் முன் தர்ணா செய்த இளம்பெண்: அதிர்ச்சி காரணம்
- IndiaGlitz, [Thursday,December 19 2019]
தென்காசி அருகே இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் உட்கார்ந்து தர்ணா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. முருகன் இந்தோனேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் சந்தோஷமாக தம்பதிகள் இருந்த நிலையில் அதனை அடுத்து மீண்டும் பணி காரணமாக முருகன் இந்தோனேசியாவுக்கு சென்றுவிட்டார்
அதன்பின் தேன்மொழி கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிந்தது. கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் அவர் போன் மூலம் தனது கணவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க விடுமுறை எடுத்துவிட்டு இந்தியாவுக்கு வாருங்கள் என்று தேன்மொழி கூற, அதற்கு முருகன் தனக்கு விடுமுறை கிடைக்காது என்பதால் விடுமுறை கிடைக்கும்போது வருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென நேற்று போன் செய்த முருகன், ‘அந்தக் குழந்தை தனக்குத் பிறக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையை தூக்கிக்கொண்டு முருகனின் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக தேன்மொழிஇடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தனது கணவர் கூறுவதாகவும் அவருக்கு தான் பிறந்தது என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனை தான் தயார் என்றும் தேன்மொழி கூறினார்.
இதனை அடுத்து முருகனை போன் மூலம் தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக ஊருக்கு வரும்படி கூறினர். முருகன் ஊருக்கு வந்தவுடன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்திய அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினார்கள். இதனை அடுத்து தேன்மொழி சமாதானமாகி தனது தாயார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.