யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

  • IndiaGlitz, [Tuesday,March 12 2019]

யூடியூப் இணைதளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்ற அளவுக்கு அதில் கோடிக்கணக்கான விஷயங்கள் கொட்டி கிடப்பதால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலர் யூடியூபை பார்த்தே பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். ஆனால் அதுவே சிலசமயம் விபரீதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

உபி மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த 26 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் 'குழந்தை பெற்று கொள்வது எப்படி? என்ற வீடியோவை பார்த்து தனக்குத்தானே குழந்தை பெற்று கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் இளம்பெண்ணும் குழந்தையும் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

அந்த இளம்பெண் தங்கியிருந்த அறைக்கு வெளியே ரத்தம் கசிவதை பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனே கதவை உடைத்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இளம்பெண்ணும் குழந்தையும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தபோது அந்த இளம்பெண்ணின் அருகில் இருந்த செல்போனில் குழந்தை பெறுவது எப்படி? என்பது குறித்த வீடியோ இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அந்த பெண் அருகில் கத்தரிக்கோல், பிளேடு உள்பட ஒருசில பொருட்கள் இருந்ததால் அவர் சுயபிரசவத்திற்கு முயற்சித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் திருமணம் ஆகாதவர் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.