பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த மனைவி!

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் கோரியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் பலர் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் என்ற பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் 20 வயது பெண் அளித்த புகாரில், ‘தனது கணவர், தன்னை பப்ஜி விளையாட்டை விளையாட அனுமதிக்காததால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் அந்த பெண்ணையும் அவரது கணவரையும் ஒன்றாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தனது மனைவி பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிவிட கூடாது என்பதற்காகவே தான் அவரை இந்த விளையாட்டை விளையாட அனுமதிக்கவில்லை என்று கூறினார். அதற்கு அந்த பெண், 'தான் அளவோடு தான் இந்த விளையாட்டை விளையாடுவதாகவும், தனக்கு சேட் செய்ய பிடிக்காது என்பதால் இந்த விளையாட்டை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதாகவும் கூறினார். இதனையடுத்து அந்த பெண்ணை அளவுடன் பப்ஜி விளையாட அனுமதிக்குமாறு கணவருக்கும், அளவுக்கு மீறி விளையாடக்கூடாது என்று மனைவிக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.