நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்து திருட முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை சோனா, ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் நடிகை சோனா வசித்து வரும் நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து இரண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். சோனாவின் வீட்டில் வளர்ந்து வரும் நாய் அவர்களை பார்த்து குரைத்த நிலையில், நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது இரண்டு நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சோனாவை மிரட்டியதாகவும், இதனால் பயந்து போன சோனா அலறியதாகவும் தெரிகிறது. அப்போது சோனா திருடர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற போது கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து திருடர்கள் பயந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் உடனடியாக சோனா வீட்டிற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கத்தியால் மிரட்டிய மர்ம நபர்கள் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.