வாய்ப்பு இருந்தும் அவுட்டாக்க மறுத்த விக்கெட் கீப்பர்.... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,February 16 2022] Sports News
ஓமனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள நாட்டு விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் செய்த காரியம் தற்போது இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது. மேலும் அவரை ரசிகர்கள் Sprit of cricket எனக் கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட் களத்தில் விதிமுறைகளையும் தாண்டி விளையாடும் வீரர்களுக்கு மதிப்புக் கொடுத்து சில மனிதநேய செயல்களும் அவ்வபோது அரங்கேறும். இதைப்பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் Sprit of cricket என கொண்டாடி தீர்த்துவிடுவர். மேலும் ஐசிசி இதுபோன்ற செயல்களைப் பாராட்டி விருதுகளையும் வழங்குகிறது.
அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் இயன் பெல் 137 ரன்களை எடுத்திருந்தபோது சர்ச்சையான ஒரு விக்கெட்டில் மாட்டிக்கொண்டார். கடைசியில் அவுட் என அறிவிக்கப்பட்டு அவர் பெவிலியனை நோக்கிச் சென்றபோது நம்முடைய கேப்டன் மகேந்திரசிங் தோனி பெருந்தன்மையுடன் அவரை பேட்டிங் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தச் செயல் பல வருடங்களைத் தாண்டியும் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திவந்த நிலையில் ஐசிசி கடந்த 2020 டிசம்பர் மாதம் தோனியை பாராட்டி Sprit of cricket என்ற விருதையும் வழங்கி கவுரவித்திருந்தது. தற்போது தோனியை நினைவுப்படுத்தும் விதமாக நேபாள வீரர் ஆசிப் ஷேக்கும் நடந்து கொண்டுள்ளார்.
ஓமனில் டி20 போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை துவங்கி 19 ஓவர்களுக்கு 114 ரன்களை எடுத்து திணறியபோது கமல்சிங் வீசிய ஒரு பந்தில் அயர்லாந்து வீரர்கள் பந்தை ஷாட்டாக அடித்து ஒரு ரன்னை எடுக்க முயற்சித்தனர். அப்போது நான் ஸ்ட்ரைக்கில் இருந்து பேட்டிங் ஸ்ட்ரைக்கை நோக்கி ஓடிவந்த பேட்ஸ்மேன் ஆன்டி மெக்பிரைன் தவறுதலாக கீழே விழுந்தார். அதற்குள் பந்து விக்கெட் கீப்பர் ஆசிப் கைக்குச் சென்றதால் அவுட்டாகிவிடுவோம் என்று மெக்பிரைன் மெதுவாக நடந்து சென்றார்.
ஆனால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட ஆசிப் அவரை அவுட்டாக்க மறுத்ததோடு பந்தை மீண்டும் பந்துவீச்சாளரிடம் வீசிய காட்சி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் ஆசிப் ஷேக் செய்த இந்த காரியத்தை உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.