3 வேளாண் சட்டங்களும் வாபஸ்… பிரதமர் மோடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Friday,November 19 2021]
மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் விவசாயிகள், இது தங்களின் நலனுக்கு எதிராக உள்ளது என்று அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும் நாடு முழுவதும் பெருங்கூட்டமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் கடந்த சில மாதங்களாக உலக அளவில் கவனம் பெற்றது.
நாடு முழுவதும் விவசாயப் போராட்டங்களினால் ஆங்காங்கே வன்முறைகளும் விவசாயிகள் இறப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர் இதனர்ல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சமீபத்தில் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கடும் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்பட்டு தற்போது வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக உறுதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.