கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!
- IndiaGlitz, [Tuesday,August 25 2020]
அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார். மினசோட்டா மாகாணம் மினியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட்டை கைதுசெய்ய முற்பட்ட காவலர் ஒருவர் தன்னுடைய காலால் மிதித்து மூச்சுத்திணறும்படி செய்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் போராட்டங்கள் வெடித்து அது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடிவுறாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து இருக்கிறது.
மினசோட்டா மாகாணத்திற்கு அருகே இருக்கும் விஸ்கான்கின் மாகாணப் பகுதியில் நேற்று முன்தினம் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிக்க-அமெரிக்க கறுப்பினத்தவரை போலீஸார் கைதுசெய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜேக்கப் பிளேக் போலீஸ் வாகனத்தில் ஏறும்போது அவரை 2 காவல் அதிகாரிகள் சட்டையைப் பிடித்து உள்ளே தள்ளியதாகவும் மேலும் அவரை பின்னால் இருந்து சரமாரியாகச் சுட்டதாகவும் உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள், ஜேக்கப் பிளேக்கை நோக்கி 7 முறை சுட்டதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால் பலத்த காயத்துடன் தற்போது ஜேக்கப் பிளேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திற்குப் பின்னர் அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக் காரர்கள் கூடியதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் மற்றொரு சர்ச்சையை அமெரிக்க அரசாங்கம் சந்திக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.