கொரோனா சிகிச்சை: உதவிக்கரம் நீட்டும் விப்ரோ ஐடி நிறுவனம்!!!
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பு அதிகமாவதைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பல தற்காலிக மருத்துவ மனைகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ.
கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, புனேவில் 450 படுக்கைகளை கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனையை பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ உருவாக்கி வருகிறது. இந்தத் தற்காலிக மருத்துவமனையில் படுக்கைகைள் மற்றும் டேபிள் போன்ற அத்யாவசியப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். வருகிற 30 ஆம் தேதிக்குள் இந்த மருத்துவமனை முழுமையாக கட்டமைக்கப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப் படும் என்று விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான முறையான ஒப்புதலையும் மாநகராட்சியிடம் பெற்றிருப்பதாக விப்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அம்மாநில அரசு அதிகாரிகள் இந்தத் தற்காலிக மருத்துவமனையில் குறைந்த பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் இதைத்தவிர 12 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும், விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, “கொரோனா தொற்று நோயை அகற்ற அரசுடன் இணைந்து விப்ரோ முழுமையாக பணியாற்றும். நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டால் இந்த பேரபாயத்தை முழுமையாக விரட்டிவிட முடியும். மனிதர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம்” எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.