யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சென்னை ஐடி ஊழியர்கள் கைது!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்களும் மதுவுக்கு அடிமையானவர்களும் மாற்று வழியை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே வார்னிஷ், மெத்தனால் உள்ளிட்டவற்றை குடித்து சிலர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருசிலர் சொந்தமாக சாராயம் காய்ச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முன்பின் சாராயம் காய்ச்சாதவர்களுக்கு கூகுளூம் யூடியூபும் தான் உதவுகிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல் ஆகும்
இந்த நிலையில் சென்னையில் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்த சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈசிஆர் நீலாங்கரை பகுதியை சேர்ந்த 22 வயது ராகுல் என்ற ஐடி ஊழியர் மற்றும் 26 வயது ராஜூ என்ற மார்க்கெட்டிங் ஊழியர் ஆகிய இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளதாலும், ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததாலும் சொந்தமாக சாராயம் காய்ச்ச முடிவு செய்தனர். இதுகுறித்து இருவரும் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்ச திட்டமிட்டு அதற்கு தேவையான திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை வைத்து சாராயம் காய்ச்ச முயன்றுள்ளனர். ஆனால் இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ஐடி ஊழியர் தனது நண்பருடன் சேர்ந்து சாராயம் காய்ச்ச முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது