முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் கிடைக்குமா?
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளும் பொருட்டு இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு இன்றும் நாளையும் அரசு போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துகள் அனைத்தும் இயங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து பெரும்பாலான மக்கள் கடைகளுக்கு செல்வதற்காக இன்றைக்கே பெரிய பட்டியலை போடத் துவங்கியுள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு நெறிகாட்டுதலில் முழு ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்கலாம். அதற்கு இ-பதிவு தேவையில்லை. அதோடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அத்யாவசியத் தேவையான பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிக்கை விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மருந்தகங்கள் நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்துகடைகளுக்கு அனுமதி பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் நாளை பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.