திருடனைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் கொரோனாவையும் கண்டுபிடிக்குமா??? சுவாரசியத் தகவல்!!!
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது. திருடனைக் கண்டுபிடிக்கவும் வெடிபொருள் போன்ற பொருட்களைக் கண்டுபிடிக்கவும் போலீஸ் மற்றும் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்பநாய்கள் தற்போது கொரோனாவை மிக எளிதாக கண்டுபிடித்து விடும் எனத் தெரிவித்து இருக்கிறது. இதற்காக கே-9 எனப்படும் மோப்பநாய் படைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கிறது எனவும் பயிற்சி மற்றும் அதன் சோதனைகளில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளது எனவும் ஐக்கிய அமீரகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அமீரகத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு முதன்முதலாக மோப்பநாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு துபாய் போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சகம், பாதுகாப்பு, குற்றப்பிரிவு, புலனாய்வு என அனைத்து பிரிவுகளிலும் மோப்ப நாய் அமைப்புக்கான சிறப்புப் படைகள் தொடங்கப் பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் படையை கே-9 மற்றும் கேனைன் எனவும் அழைப்பர். அந்தப்படைகளில் ஜெர்மன் ஷெப்பர்ட், மலினோய்ஸர், லாப்ரடார் போன்ற இனவகை நாய்கள் பயன்படுத்தப் படுகின்றன. காரணம் இந்தவகை நாய்களுக்கு மூக்கின் திறன் உணர்தல் மிக அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தநாய்களில் கிட்டத்தட்ட 25 கோடி உணரும் திறன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களை மோப்பநாய் கொண்டு அறிந்து கொள்ள முடியுமா என்ற முயற்சியில் அமீரக அதிகாரிகள் முயன்றுள்ளனர். இதற்காக உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு மோப்பநாய் படை உருவாக்கப்பட்டு பிரான்ஸ் கால்நடை துறையின் உதவியுடன் பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப் பட்டுள்ளது. கொரோனாவை கண்டுபிடிக்க உதவும் வகையில் முதலில் கொரோனா ஒட்டியுள்ள பொருட்களைக் கொடுத்து பயிற்சி கொடுக்கப் பட்டதாகவும் அடுத்து கொரோனா பாதித்தவர்களின் வியர்வைத் துளிகள் பயிற்சிக்காக வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பயிற்சி மற்றும் சோதனை கட்டங்களைத் தாண்டி தற்போது அமீரகத்தின் மோப்பநாய் சிறப்பு படை கொரோனா நோயாளிகளை மிக எளிதாக அவர்களின் வியர்வை வாசனையை வைத்து கண்டறிந்து விடுவதாக அமீரகத்தின் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது அமீரகத்தின் சுகாதாரத்துறை பணியாளர்களின் உதவியுடன் அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.