ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும்- தமிழக அரசு அதிரடி!!!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது ஆன்லைனில் வகுப்பு பாடங்களை தொடங்கி இருக்கின்றன. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பிற தனியார் தொலைக்காட்சி வயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இணையவசதி மற்றும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத லட்சக்கணக்கான மாணவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் கட்டணவசூல் தொடர்பான புகார்கள் வந்தாலும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்யக்கோரி சரண்யா மற்றும் விமல்மோகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றனர். இந்த வழக்கிற்கான விசாரணையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. மேலும் விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால் feescomplaintcell@gmail.com என்ற இமெயில் மூலமாகப் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிகளை கண்காணித்து வருவார்கள், ஏதேனும் புகார்கள் வந்தால் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அரசு சார்பாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் வகுப்பு ரத்துக்கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், பல மூத்த ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை கொண்ட ஒரு நிபுணர் குழுவின் கவனமான ஆராய்ச்சிக்குப் பின்னர் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதைத்தவிர மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் பழங்குடி மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை வழங்குவதற்காக கல்வி தொலைக்காட்சி மூலம் அரசு வகுப்புகள் நடத்தத் தொடங்கி உள்ளத்தாகவும் தனியார் சேனல்களில் கூட ஒளிப்பரப்பப் படுவதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இதன்மூலம் பழங்குடி மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகள் தவறாமல் ஒளிப்பரப்பப் படும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன் பெறலாம் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஆன்லைன் வழக்கு விசாரணையில் விளக்கம் அளித்த ஏஏஜி தரப்பு, இரண்டாம்நிலை மட்டத்திலிருந்து இரண்டு மணிநேரங்களுடன் குறிப்பிட்ட நேரத்தைக் கொண்ட ஒவ்வொரு தரநிலையுடனும் ஆன்லைன் வகுப்பிற்காக பிரத்யேகமாக பாடத்திட்டங்கள் தயாரிக்கப் பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக் குழந்தைகள் ஆபாசமான தளங்களுக்குச் செல்லாமல் இருக்க அனைத்து பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.