சென்னை சிறைக்கு சிக்கலின்றி மாறுவாரா சசிகலா?
- IndiaGlitz, [Tuesday,February 21 2017]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த நடவடிக்கைகளில் அதிமுக வழக்கறிஞர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் ஆவடி குமார் கூறியபோது, 'சட்டத்திற்கு உட்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்வார்கள்' என்று கூறினார்.
சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்றால் சட்டப்படி பார்ப்பர அக்ஹார சிறை கண்காணிப்பாளர் அல்லது சட்ட அமைச்சரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இது இருமாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் கர்நாடக அரசிடம் விண்ணப்பித்து, கர்நாடக அரசு தமிழக அரசிடம் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வழக்கில் கர்நாட அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா இதுகுறித்து கூறியபோது, 'பொதுவாக ஒரு கைதியை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்ற இருமாநில சிறை அதிகாரிகள் முடிவு செய்தாலே போதுமானதுதான். ஆனால் சசிகலா வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் அவரை இடமாற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளார்.
சசிகலாவின் ஆதரவாளர்தான் தமிழக முதல்வர் என்பதால் சட்டப்படி சசிகலாவை சென்னை சிறைக்கு சிக்கலின்றி மாற்ற அவர் என்னென்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்