மின் கோபுரங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா??? தமிழகத்தில் தொடரும் எதிர்ப்புகள் ஏன்???
- IndiaGlitz, [Wednesday,February 12 2020]
தமிழகத்தில் உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். அடிப்படையில் மின் கோபுரங்கள் ஏன் அமைக்கப் படுகின்றன? அதனால் விவசாயிகளுக்கு வரும் பாதிப்பு என்ன? இதற்கு மாற்று வழிகள் ஏதாவது இருக்கிறதா? இத்திட்டத்தில் எவ்வளவு நிலங்கள் பயன்படுத்தப் படுகின்றன? மின் கோபுரங்களினால் சுற்றுச் சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்பதைக் குறித்த தெளிவான வாதங்கள் வைக்கப் பட வேண்டியிருக்கிறது.
கடந்த ஜுலை மாதத்தில் தமிழக விவசாயிகள் டெல்லி வரை சென்று, மீன் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் சக்தியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தும் உயர் மின் கோபுரங்கள் பல திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தப் படுகிறது. கடந்த அரை நூற்றாண்டுகளாக இந்தியா முழுக்க பல இடங்களில் அமைக்கப் பட்டு இருகின்றன. தற்போது தமிழக விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் உள்ள காரணத்தை விவாதிக்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே அதிகமான மின் கோபுரங்கள் அமைக்கப் பட இருக்கிறது என்றும், அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். தமிழகத்தில் 132 மின் பாதைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 32 மின் பாதைகள் அனுமதிக்கப் பட்டு விட்டன. இந்த உயர் மின் கோபுரங்களை அமைப்பதால் ஏராளமான விவசாய நிலங்கள் சேத மடையும் என்றும், விவசாய நிலங்களில் மின் கம்பங்கள், மின் சக்தியை கசிய விட்டு பயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மின் கம்பத்திற்கு பக்கத்தில் வெறுங் காலுடன் பல்பினை பிடித்து இருக்கும்போது அது எரிவதாகவும் விவாசயிகள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு மின் சக்தியை கம்பிகள் கசிய விடுகின்றன என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப் படும் திட்டத்தில் திருவண்ணாமலை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி, தர்மபுரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல் போன்ற 13 மாவட்டங்களில் செயல்படுத்தப் பட உள்ளன. இத்திட்டத்தில் மின்கோபுரங்கள் பெரும்பாலும் விளை நிலங்களில் அமைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மின் கோபுரத்திற்கும் 40 – 90 மீட்டர் நிலங்கள் கையகப் படுத்தப் படுகின்றன. 30 க்கும் மேற்பட்ட வழித்தடங்களையும் உருவாக்க இருக்கின்றனர் என்பது தான் இங்கு முக்கியமான விஷயம். இந்த வழித்தடங்களை இணைக்கும்போது மின் சக்தி மேலும் வீரியம் கொண்டதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் புகளுர் பகுதியில் ஆரம்பித்து ஆந்திரா, தெலுங்கானா, மாநிலங்கள் வழியாக சட்டீஸ்கரின் ராய்ப்பூர் மாநிலம் வரை சுமார் 1,843 கிமீ தூரம் மின் வழித்தடங்கள் அமைக்கப் பட இருக்கின்றன. இதற்காக 5,530 உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப் படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தை ஏற்படுத்தும் போது 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மின் கோபுரங்களின் வழியாக கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 24 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் செயல்படுத்தப் பட உள்ள இத்திட்டத்திற்கு பல கட்சிகள் மற்றும் விசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள புகளுர் அடுத்த திருவலம், ராய்கர், மைவாடி, அரசூர், இடையார் பாளையம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் உயர் மின் அழுத்த மின் பாதைகள் அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளது. அதோடு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சில இடங்களில் உயரழுத்த மின் பாதை திட்டங்களையும் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் பாதைகளில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களின் நிலைமை தற்போது கேள்விக் குறியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 345 கி.மீ தூரம் மின்பாதை அமைக்கப் படும் என அரசு தெரிவித்துள்ளதை அடுத்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும், மின் கோபுரங்கள் அமைக்கப் படும் இடங்களில் கிணறு, ஆழ்த் துளை கிணறு, போர் போன்றவற்றை அமைப்பதற்கு தடையும் விதிக்கப் படுகிறது. இந்நிலையில் தண்ணீர் ஆதாரங்கள் அமைக்கப் படுவதற்கு வசதி இல்லாமல் நிலங்கள் வறண்டு போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மின் கம்பங்கள் இருக்கும் இடத்தில் இருபுறமும் சுமார் 20 அடி தூரத்திற்கு பயிர்கள் வளருவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உயர் மின் கோபுரங்களினால் விவசாய நிலங்களின் அளவுகளும் குறைந்து போகிறது. நீர், பயிர் வளம், சிறிய உயிரினங்களின் நிலை போன்ற பல வகைகளில் பிரச்சினை இருப்பதாகவும் இதற்கு மாற்று வழியினைத் தேட வேண்டும் என்றும் தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உயர் மின் கோபுரங்களுக்குப் பதிலாக கேபிள் வழியாக மின் சக்தியை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. கெயில் இணைப்புத் திட்டமும் விவசாயத்தினை பெருமளவிற்கு பாதித்து வருகிறது. விவசாயத்திற்கு பாதிப்பு வராத வகையில் இத்தகைய திட்டங்களை சாலைகளின் ஓரங்களில் ஏற்படுத்த வேண்டும் எனவும் மாற்று யோசனையைக் கூறியுள்ளனர்.
வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கான வழித்தடத்தினை அமைக்கும் முயற்சி கடந்த 2017 இல் தொடங்கப் பட்டது. எதிர்காலத்தில் தேவைப்படும் மின்சாரத் தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு இந்த வழிமுறைகள் பயன் அளிக்கும் என்ற அடிப்படையில் இத்தகைய திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாயிகள் கூறுவதைப் போல நிலத்திற்கு அடியில் மின் கம்பிகளைப் புதைப்பதால் மின் கோபுர திட்டத்தை விட 20% செலவு அதிகரிக்கும் என அரசு தரப்பு கூறுகிறது. அரசு நிலத்தின் மதிப்பை விட இரண்டரை, மூன்றரை மடங்கு அதிகமான விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்த இடங்களில், நிர்ணயிக்கப் பட்ட தொகை விவசாயிகளுக்கு கொடுக்கப் படுவது இல்லை எனவும் குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.
கருத்துக் கேட்பு கூட்டங்கள் எதுவும் நடத்தப் படாமல் விவசாயிகளின் ஒப்புதலைப் பெறாமல் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை அரசு திட்டமிட்டுள்ளது என்ற குற்றச் சாட்டும் எழுப்பப் பட்டு இருந்தன. மின் கோபுரம் அமையும் இடத்திற்கு 85% மும் ஒயர் அமைக்கும் பகுதிகளுக்கு 15% மும் பணம் கொடுக்கப் படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் இது முறையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் கவனிக்கத் தக்கது.
மின் கோபுரம் அமைக்கப் படும் பகுதிகளில் நில மதிப்பு அடி மட்டத்திற்கு குறைகிறது. அங்குள்ள மரங்களும் வெட்டப்படுகின்றன. மரங்களை அழித்து விவசாயத்தினை அழித்துவிட்டு, வாழ்வாதாரத்தையே இத்திட்டம் கேள்விக் குறியாக்கி இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மின் வழித்தடங்களுக்கான திட்டங்கள் வரவேற்கப் பட வேண்டியது தான் ஆனால் ஊறுக்கே சோறு போடும் விவசாயத்தை அடியோடு அழித்து விட்டு இத்தகைய திட்டங்களை மேற்கொள்வது எப்படி சரியாகும் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நிறுத்தப் பட்டுள்ளது. தற்போது, அரசு மின் கோபுர திட்டத்தை குறித்து ஏதேனும் மாற்றுக் கருத்தினை ஏற்குமா என்ற எதிர்ப் பார்ப்புகளும் உருவாகி இருக்கிறது.