பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுகிறாரா?
- IndiaGlitz, [Sunday,June 24 2018]
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைப்பது உள்பட் பல்வேறு பணிகளில் சுமார் 400 பேர் வரை பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிகக்குறைவாகவே பணிபுரிவதாகவும், பெப்சி யூனியனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
பிக்பாஸ் சீசன் 1 நடக்கும்போதே இதே தவறுதான் நடந்தது. ஆனால் கமல் அவர்களிடம் இதனை சுட்டிக்காட்டியபோது அவர் 50% தமிழக தொழிலாளர்கள் பணிபுரியும் வகையில் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த இரண்டாம் சீசனில் 400 பேர்களில் எங்கள் தொழிலாளர்கள் வெறும் 41 பேர்தான் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த 41 பேர்களும் இனிமேல் பணிபுரிய மாட்டார்கள். இந்த 41 பேர்களில் கமல் அவர்களும் ஒருவர் என்பதும், கமல் எங்கள் முடிவுக்கு உடன்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது' என்று கூறினார்.
கமல் இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்.கே.செல்வமணி, 'கமல் அவர்கள் இதற்கு முன்னர் தொழிலாளர்கள் நலன் கருதி பல முடிவுகள் எடுத்துள்ளதால் இந்த முடிவுக்கும் அவர் உடன்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்று குறினார்.
தமிழக தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 40 பேர்களுடன் கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்