கொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா??? ஷுக்களில்??? தலைமுடியில்??? மருத்துவர்களின் விளக்கம்!!!

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

 

கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது என செய்தி வெளியிட்டு இருந்தது. (C.D.C) யின் அறிக்கையின்படி கொரோனா வைரஸ் கண்ணாடி பொருட்களின்மீது குறைந்தது 24 மணிநேரத்திற்கு தங்கும். அட்டைப்பெட்களிலும் 24 மணிநேரம் வரை உயிர்வாழும். கதவுப்பிடி போன்ற உலோகங்களின் மீது 3 நாட்கள் வரையிலும் வாழும் தன்மையுடையது எனக் கூறப்பட்டு இருந்தது.

அதைத்தவிர உணவுப்பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்ற சந்தேகம் எழுப்பப் பட்டு இருந்தது. அதற்கு வர்ஜீனியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இதுவரை எந்த வைரஸ் நோய்த்தொற்றும் உணவுப் பொருட்களின் மூலம் பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா விஷயத்திலும் உணவுப் பொருட்களின் மூலம் வைரஸ் பரவியதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை எனத் தெரித்து இருந்தனர். எனவே உணவு பொட்டலங்களை வெளியில் இருந்து வாங்கும்போது அவற்றின்மீது கிருமிநாசினி தெளிக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். கிருமிநாசினி உணவுப் பொருட்களின் மீது பட்டால் ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. நியூயார்க்கின் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பிரசவத்தினால் நேரடியாக கொரோனா வைரஸ் குழந்தைகளைத் தாக்காது என விளக்கம் அளித்து இருந்தனர். அவர்களின் சுவாச உறுப்புகளோடு தொடர்பு ஏற்படாத வரை நோய்த் தாக்குவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்து இருந்தனர். அதோடு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் எந்த பாதிப்பும் வராது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா என்ற கேள்வி எழுப்பப் பட்டு இருக்கிறது. New England journal of Medicine இல் வெளியிட்டப்பட்ட கட்டுரையில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படுகின்ற நீர்த்திரவத்தில் இருந்து மற்றவர்களுக்கு பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்திரவத்தின் மூலமாக வெளிப்பட்டாலும் 8 நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்கள் வரை மட்டுமே காற்றில் வைரஸால் தாக்குப் பிடிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் ஆடைகளைப் பற்றிக் கொள்வதற்கு வாயப்பு குறைவு எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது நீர்த்திரவங்கள் வெளிப்பட்டாலும் அது மிகவும் சிறிய துளியாகத்தான் இருக்கிறது. பெரிய துளியாக இருக்கும் போதுதான் வைரஸ் ஆடைகளில் தங்கி விடுகிறது. கொரோனா வைரஸ் காலங்களில் சமூக விலகல் பற்றிய பயம் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே பொதுவெளியில் நடமாடும் ஒரு நபர் மற்றவரைப் பார்க்கும்போது வேகமாக அவரை இடித்து விட்டு செல்லமாட்டார். அவரது மனதில் அடிப்படையிலேயே பாதுகாப்பு உணர்வு இருப்பதால் மெதுவாக செல்வார். இரண்டு நபரும் வேகம் காட்டாமல் மெதுவாகச் செல்வதால் அந்த இடத்தில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். இதனால் நீர்த்துளிகள் வெளிவந்தாலும் பெரும்பாலும் மற்றவர்களின் ஆடையை அது தொற்றிக் கொள்ளாது. எனவே நீங்கள் பொதுவெளியில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தால் வீட்டிற்குச் சென்றவுடன் உடை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை பாதுகாப்பு உணர்வு ஏற்படாத பட்சத்தில் குளிப்பது, உடைமாற்றுவது, கிருமிநாசினி பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

அடுத்து ஒருவரின் தலைமுடியில் கொரோனா வைரஸ் இருக்குமா? இதுவரை தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்குமா என்பதைப் பற்றி எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப் படவில்லை. அப்படி பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் ஒருவர் மற்றவர்கள் உங்கள் தலைமுடியின்மீது படும்படியாக தும்மினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியே தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்கினாலும் அதை கைகளால் தொட்டு, நேரடியாக மூக்கு, வாய்ப் பகுதிக்கு கொண்டுபோனால் மட்டுமே பிரச்சனை. எனவே தலைமுடியின் மூலம் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்றே கூறப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவியபோது விஞ்ஞானிகள் வைரஸ் மாதிரிகளை ஆடைகளிலும் காகிதங்களிலும் சோதித்து பார்த்தனர். அது துணிகளின் தன்மையைப் பொறுத்து உயிர் வாழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டது. குறைந்தது 5 மணி நேரம் முதல் 25 மணிநேரம் வரை ஆடைகளில் உயிர் வாழக்கூடும் எனவும் கூறப்பட்டது.

அஞ்சல் அட்டை – கடிதங்கள் போன்ற அஞ்சல் அட்டைகளில் கொரோனா வைரஸ் தங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அதேபோல செய்தித்தாள்களில் கொரோனா வைரஸ் இருக்கும் என்ற அச்சமும் தேவையற்றது எனக் கூறப்படுகிறது. பாதுகாப்பான முறைகளைக் கையாளும்போது வெளியே செல்வது கூட பெரிய தவறு இல்லை. ஏனெனில் காற்றில் பரவும் நீர்த்துளிகள் அதிக நேரம் உயிரோடு இருப்பதில்லை. ஆனால் கூட்ட நெரிசல் மிகவும் கவலைத் தரக்கூடியது எனவும் கூறப்படுகிறது. கைகடிகாரம், பெல்ட், கண்ணாடி போன்ற பொருட்களையும் தவிர்க்குமாறு சில வதந்திகள் பரவி வருகிறது. இந்தப் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்வதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. எனவே இதுபோன்ற பொருட்களிலும் ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல ஷுக்களில் கொரோனா வைரஸ்கள் தங்குமா என்ற கேள்வியும் பொதுவாக இருந்து வருகிறது. ஷுக்களில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதன் மூலம் பொருட்கள் நாசமாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் இந்தக் கேள்வியும் எழுப்பப்படுகிறது. சீனாவில் பல சுகாதாரப் பணியாளர்களின் ஷுக்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே உங்கள் கைகளைக் கொண்டு சுத்தப்படுத்தாமல் வேறு வழிமுறைகளைப் பின்பற்றி ஷுக்களை கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.