தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகுமா???
- IndiaGlitz, [Tuesday,October 06 2020]
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் கல்விமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப் படுவதைக் குறித்து இறுதியான முடிவு எதுவும் வெளியாக வில்லை. ஆனால் மாணவர்களுக்கு தமிழகப் பள்ளி கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட கல்வி இழப்பீட்டை சரிசெய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது.
இந்நிலையில் அந்த நிபுணர் குழு கொரோனாவால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்டு இருக்கும் நிலைமை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைப்பது, காலாண்டு தேர்வுகளை ரத்து செய்வது போன்ற பல திட்டங்கள் இந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே நடைமுறைப் படுத்தப்பட்டன.
அந்த வகையில் தற்போது இந்த நிபுணர் குழு இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 2 மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு தமிழக அரசிடம் பரிந்துரை செய்யும் என பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஒரு உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அப்படி ஒரு அறிவிப்பு வெளியானால் 11 ஆம் வகுப்புத் தேர்வும் தள்ளிப்போகும் எனவும் அந்த அதிகாரி நம்பத் தகுந்த வகையில் குறிப்பிட்டு உள்ளார் என ஜி தமிழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இத்தகவல் எதுவும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடக்காமல் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் நடக்கும் என அந்த அதிகாரி குறிப்பிடுகிறார். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு முடிவு எடுப்பது கடினம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார். காரணம் வருடாந்திர தேர்வுகளை மாணவர்கள் எழுதி முடித்தப் பின்னர் தேசிய அளவில் நடைபெறும் நீட் மற்றும் ஜேஇஇ போட்டித் தேர்வுகளுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதால் இதில் முடிவெடுப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.