சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான தகவல்!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுக்கவே தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வருகின்றனர். காரணம் பொதுத்தேர்வுகள் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் மாநில அரசுகள் ரத்து செய்து இருகின்றன. ஆனால் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டி இருக்கிறது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் சிபிஎஸ்இ 12 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர். கொரோனா காரணமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு பள்ளிகளைத் திறக்கவே முடியாது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சாத்தியமா? அல்லது ஆன்லைனில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா? அப்படி நடத்தினால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி கணக்கிட்டு கொடுப்பது என்ற பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன.

இதையடுத்து வரும் ஜுன் மாதத்தில் சிபிஎஸ்இ தேர்வு தொடர்பான சீராய்வு கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அதிகாரி ஒருவர் பெரும்பாலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

ஆனால் சிபிஎஸ்இ தலைவர் அசோக் கங்குலி கொரோனா பரவல் சற்று குறைந்தவுடன் வரும் ஜுலை மாதத்தில் தேர்வுகளை நடத்தத் திட்டமிடலாம். அதோடு இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தப் பரிந்துரை செய்யலாம் எனவும் கருத்து வெளியிட்டு உள்ளார். இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்படி நடத்தப்படும்? எப்போது நடத்தப்படும் என்பது போன்ற கேள்வி வலுவாகி வருகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் அதிக மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் சிறப்பு தேர்வினை எழுதி அதன் மூலம் மதிப்பெண்களைக் கூட்டிக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை கூறி இருந்தது. ஆனால் இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்ற அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாக வில்லை.

அதேபோல தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து தற்போது எழுத்துத் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வுகள் குறித்து நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தின் முடிவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உறுதியாகப் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால் தேர்வு முறைக் குறித்தும் நேரம் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.