வேண்டுமென்றே உடலுறவை தவிர்த்த மனைவி? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

திருமண வாழ்வில் வேண்டுமென்றே உடலுறவை தவிர்ப்பது மனக்கொடுமைக்கு சமம் என்று கூறி டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

ஆன்லைன் மேட்ரிமோனியல் பக்கத்தில் துணையைத் தேடிய பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் 13 மாதங்கள் பழகிய பின்பு கடந்த 2014 இல் அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் ஆனதில் இருந்தே தனது கணவருடன் உடலுறவு கொள்வதை அந்தப் பெண் தவிர்த்து வந்ததால் ஒருகட்டத்தில் அவருடைய கணவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் என் மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார் என்று கூறிய அந்தக் கணவர் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி விபின் குமார் ராய் விசாரித்துள்ளார்.

அந்த விசாரணையின்போது இருதரப்பினரும் பல்வேறு வாதங்களை வைத்துள்ளனர். அதிலும் பெண்ணின் தகப்பானார் என் மகளுக்கு உடலுறவின் மீது பயம் கொள்ள செய்யும் ஜீனோபோபியா என்ற நோய் இருக்கிறது என்று வாதாடியதோடு விவாகரத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விபின் குமார் ராய் இயல்பான ஆரோக்கியமான பாலியல் உறவு என்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் அடிப்படை அங்கம். வேண்டுமென்றே தனது இணையுடன் பாலியல் உறவைத் தவிர்ப்பது என்பது மற்றொரு நபரை மன ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கும் செயல். குறிப்பாக இருவரும் இளம் ஜோடியாக இருக்கிறார்கள் என்று கூறி விவகாரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த வழக்கில் மேலும் பேசிய நீதிபதி விபின் குமார் ராய் ஒருவரை தானே சுயமாகத் தேர்வு செய்து திருமணம் செய்துகொண்ட பிறகு அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.