2 நாட்களாக தொடர்ந்து பற்றியெறியும் காட்டுத் தீ… 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்து நாசம்!!!
- IndiaGlitz, [Monday,August 03 2020]
அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி பகுதியில் உள்ள மலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் சாதாரணமாக ஏற்பட்ட தீ பின்னர் மளமளவென பெரும் காட்டுத் தீயாக மாறியதாகவும் இதனால் மலைப்பகுதி முழுவதும் கரும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவக்கின்றன. இதனால் ரிசர்சைட் கவுண்டியை ஒட்டியுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் 2,500 வீடுகளில் உள்ள 8 ஆயிரம் பேர் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில் 700 ஏக்கரில் தீ பரவயிருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை முற்றிலும் தீ விழுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தீயை அணைப்பதற்காக வனத்துறை காவலர்கள் மிகக் கடுமையாகப் போராடி வருவதாகவும் ஆனால் மலைப்பகுதி செங்குத்தாக மற்றும் கரடுமுரடாக இருப்பதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2 நாட்களாகத் தொடர்ந்து எரியும் தீ விபத்தால் இதுவரை 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளது. இத்தீ விபத்திற்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் ஆப்பிள் பயர் என்றும் பெயர் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் கடும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் வனப்பகுதியிலுள்ள மரங்கள் இப்படி அழிந்து போவதால் ஏற்கனவே தட்ப வெப்ப காலநிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கு மட்டுமல்லாது வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விலங்கினங்களின் பாதுகாப்புக்கும் இதனால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தற்போது முடிவுக்கு வராத இந்த தீ விபத்தால் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் செய்திகள் கூறுகின்றன.