விக்கீபீடியா மாதிரி நித்தியானந்தாபீடியா… ரவுண்டு கட்டி கலக்கும் நித்யானந்தா!!!
- IndiaGlitz, [Monday,August 17 2020]
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் வழக்கு என அடுக்கடுக்கான வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சுவாமி நித்தியானந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றதாகப் பரபரப்பு கிளம்பியது. தற்போது மறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் தனது சிஷ்யர்களுடன் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நாட்டிற்கு புதிய கரன்சி மற்றும் ரிசர்வ் வங்கி பற்றிய அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டு இருந்தார். வருகிற விநாயக சதுர்த்தி அன்று (ஆகஸ்ட் 22) ஆம் தேதி இது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
வாடிகன் சிட்டியின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனது ரிசர்வ் வங்கி சட்டப்படி உருவாக்கப் பட்டதுதான் எனவும் நித்யானந்தா தெரிவித்து இருந்தார். புதிய கரன்சி, புதிய வங்கி என அதிரடி காட்டும் நித்யானந்தா தற்போது புதிய இணையத் தரவு பக்கம் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார். Nithayanandapedia எனும் புதிய தரவுப் பக்கம் விக்கிபீடியாவைப் போலவே இருக்கும் எனவும் தன்னைப் பற்றிய புது அப்டேட்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தனது புதிய இணையத் தரவைப்பற்றி கூறிய நித்யானந்தா “தன்னை ஆண்டி என்றாலும் ஓகேதான்… அதிபர் என்றாலும் ஓகேதான்…” என்றும் பேசியிருக்கிறார். தனி நாடு, தனி ரிசர்வ் வங்கி, அதற்கு 300 பக்க பொருளாதாரக் கொள்ளை, தனி கரன்சி வரிசையில் தற்போது புதிய இணையத் தரவுப் பக்கம் என நித்யானந்தாவின் கண்ணோட்டம் முன்னோக்கி அடுத்தடுத்து அதிரடி காட்டும் வகையறாவாக இருக்கிறது எனப் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.