விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!
- IndiaGlitz, [Thursday,April 11 2019]
அமெரிக்காவில் இருந்து தப்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் அசாஞ்சே என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவம் தொடர்பான முக்கிய ரகசியங்களை, தனது விக்கி லீக்ஸ் வலைதளத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதை அறிந்த அசாஞ்சே ஸ்வீடன் நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
ஸ்வீடனில் அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அந்நாட்டு போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லண்டன் சென்றார். லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்த அசாஞ்சே கடந்த சில ஆண்டுகளாக, ஈக்வேடார் தூதரகத்தில் வசித்து வந்தார். அசாஞ்சேவை, இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க, ஈக்வடார் அதிபரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இன்று அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அசாஞ்சேவை, விரைவில் அமெரிக்காவிடம் இங்கிலாந்து ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.