5 கோடி ஜீவனாம்சம் தராத கணவரின் குடும்பத்தை கொலை செய்த மனைவி: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் வீட்டினர் தராததால் தனது சகோதரரின் உதவியால் கணவரின் குடும்பத்தில் மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த மனைவியால் சென்னையில் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தலில் சந்த் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு புஷ்பா பாய் என்ற மனைவியும் ஷீத்தல் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷித்தலுக்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஜெயமாலா என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷீத்தல் மற்றும் ஜெயமாலா இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து கேட்டு ஜெயமாலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தனக்கு ஜீவனாம்சமாக 5 கோடி வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து ஜெயமாலா மற்றும் ஷீத்தல் குடும்பத்தினரிடையே பிரச்சினைகள் வந்ததாகக் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஜெயமாலாவின் புனே வீட்டிற்கு சென்ற தலில்சந்த், அந்த குடும்பத்தை மிரட்டியதாகவும் அதேபோல ஜெயமாலாவின் சகோதரர்கள் சென்னை வந்து தலில்சந்த் குடும்பத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென ஜெயமாலா தனது சகோதரர்களுடன் வந்து தனக்கு ஜீவனாம்சம் ரூ. 5 கோடி வேண்டும் என்றும் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனையடுத்து எதுவாக இருந்தாலும் சட்டப்படி நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று தலில்சந்த் கூற, இதனால் ஆத்திரமடைந்த ஜெயமாலா உடனே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலில்சந்த், அவருடைய மனைவி மற்றும் கணவர் ஷீத்தல் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றார்.

இதனை அடுத்து தனது சகோதரர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் காரிலும், ரயிலும் மூவரும் புனேவுக்கு தப்பித்து சென்றதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து புனேவுக்கு விமானம் மூலம் ஒரு தனிப்படையும் ரயிலில் சென்றவர்களை பிடிக்க ஒரு தனிப்படையும் விரைந்து ஈடுபட்டதில் கொலைக்கு காரணமான ஜெயமாலா உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக கணவரின் குடும்பத்தையே இளம்பெண் ஒருவர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.