ஜவுளிக்கடை தீவிபத்தின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் சிவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரையைச் சேர்ந்த சிவராஜ் அவர்களுக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தீ விபத்தில் எதிர்பாராமல் பலியான சிவராஜ் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 25 லட்சமும் தீயணைப்பு துறை சார்பில் ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அங்கயற்கண்ணிக்கு தீயணைப்புத் துறையில் வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது

இந்தநிலையில் கணவரின் மறைவிற்குப் பின் தனது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்ற அங்கையற்கண்ணி இறந்த கணவரையே நினைத்து சோகமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மூத்த மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவரின் மறைவு மற்றும் மூத்த மகனின் உடல் நலக் குறைவு ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கையற்கண்ணி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கயற்கண்ணி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அங்கயற்கண்ணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்

கணவரை இழந்த சோகத்திலும் மூத்த குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன பாதிப்பால் அங்கயற்கண்ணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்