கணவரை கொலை செய்துவிட்டு மகள் மீது பழி போட்ட தாய்! கள்ளக் காதலால் விபரிதம் 

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

சேலம் அருகே கணவனை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியை தனது 16 வயது மகள் மீது போட்ட தாய் குறித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படவெட்டி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நளா என்ற மனைவியும் 16 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் படவெட்டி மனைவி தனது உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை படவெட்டி கண்டித்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து தனது கள்ளக் காதலை நளா நீடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று போதையில் வந்த படவெட்டி, மனைவியிடம் கள்ளக்காதல் குறித்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நளா, அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது தன்னுடைய 16 வயது மகளிடம் தகாத முறையில் படவெட்டி நடந்ததாகவும் அதனால் தனது மகள் அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்து விட்டதாகவும் கூறினார்.

ஆனால் போலீசார் இதனை நம்பாமல் நளாவின் மீது சந்தேகமடைந்து இதுகுறித்து தீவிரமாக விசாரித்தனர் அப்போது நளாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து நளாவை காவல் நிலையத்துக்கு வந்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். குடிபோதையில் இருந்த தனது கணவரை அம்மிக்கல்லை போட்டு கணவரை கொலை செய்ததாகவும் மகள் மீது பழிபோட்டால் அவருக்கு குறைந்த தண்டனை தான் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

இதனை அடுத்து நளாவையும் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் கள்ளக்காதலால் கணவனை கொலை செய்துவிட்டு மகள் மீது பழி போட முயன்ற தாய் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.