இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் மாஸ்க் போடணுமா?
- IndiaGlitz, [Tuesday,May 25 2021]
அமெரிக்காவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள், கூட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் போட தேவையில்லை என்று அந்நாட்டின் CDC அறிவுறுத்தி இருக்கிறது. இதுபோன்ற அறிவிப்பை பார்த்த நம்மூர் மக்களும் இந்த நடைமுறையை கடைப்பிடிக்கலாமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது சற்று சரியத் தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி எத்தனை சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்பதைப் பொறுத்துதான் மாஸ்க் அணிவதிலும் முடிவெடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 45% வயது மூத்தவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் மேலும் 60% பேர் 1 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
இதற்கு மாறாக இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை அளித்துள்ள புள்ளி விவரத்தின் படி ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவர்கள் வெறும் 15% என்றும் இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்ட பெரியவர்கள் வெறும் 4% என்றும் கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவில் வெறும் 3% பேர் மட்டுமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்தியாவில் முதல் அலை பரவலின்போது இந்ததை விட தற்போது பி1617 எனும் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் தற்போது செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் வெறும் 50% பலனை மட்டுமே கொடுக்கிறது என ஐசிஎம்ஆரும் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் உருமாறிய கொரோனாவால் இந்திய மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் செயல்திறன் முழுமையான பலனை கொடுக்குமா என்று எய்ம்ஸ் இயக்குநர் திரு ரந்தீப் குலேரியாவும் சந்தேகம் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கும்போது 60% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செஷல்ஸ் தீவு மக்களுக்கு தற்போது மீண்டும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுபோன்ற தன்மைகளாலும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக் குறியாகி இருக்கிறது. அதேபோல இங்கிலாந்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற சந்தேகங்களால் கொரோனா தடுப்பூசியை பேரிடர் கால தற்காப்பு கருவியாகக் கருத முடியுமே தவிர முழுமையான நிவாரணமாக கருத முடியாது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நேரடியாக மீண்டும் கொரோனா தாக்கினால்? அதோடு மாஸ்க் போடாமல் இருந்து உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா வந்தால்? எனவே தடுப்பூசி முழுமை பெறும்வரை மாஸ்க் என்ற உயிர்க்காக்கும் கருவியை ஒருபோதும் மறக்கக்கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.