பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Wednesday,September 08 2021]

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவருடன் இணைந்து நடிக்க முடியாது என விஜய்சேதுபதி கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி தற்போது 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒரு சில படங்கள் தொடர்ச்சியாக ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த படக்குழுவினர் முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த முயற்சிக்கு விஜய் சேதுபதி முட்டுக்கட்டை போட்டு உள்ளார். அந்த படத்திற்கு கீர்த்தி ஷெட்டி நாயகியாக வேண்டாம் என்றும் வேறு நடிகையை பரிசீலனை செய்யவும் என்றும் விஜய் சேதுபதி படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம். காரணம் விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான ’உப்பன்னா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு மகளாக நடித்த நடிகைகளுடன் பின்னாளில் ஜோடியாக நடித்த வரலாறு கோலிவுட்டில் இருந்தாலும், மிக குறுகிய காலத்தில் மகளாக நடித்தவருடன் ஜோடியாக நடிக்க விஜய்சேதுபதி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.