உக்ரைனில் நடக்கும் போருக்கு என்ன காரணம்? சுருக்கமான விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

பழைய சோவியத் ஒன்றியத்தில் ஒன்றாக இருந்த தன்னுடைய நட்பு நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

அடிப்படையில் இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு கடுமையான செயல் என்றுதான் உலக அளவில் பார்க்கப்படுகிறது. மாறாக இந்தப் போர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தனது வலிமையை நிரூபிக்க முயலும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

சோவியத் யூனியன்

சோவியத் ஒன்றியத்தின் தலைமையாக இருந்த ரஷ்யாவின் வலிமை குறைந்த பிறகு அதன் சர்வாதிகாரத்தை எதிர்த்து அதனுடன் இருந்த நாடுகள் கடந்த 1991 ஆம் ஆண்டு பிரிந்து சென்றன. அப்படி பிரிந்த நாடுகளுள் ஒன்றுதான உக்ரைன். மேலும் சோவியத் யூனியன் பிரியும்போது கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் எந்தவித ஆயுத பயிற்சி மற்றும் ஆயுதப் பரிமாற்றங்களையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் அமெரிக்காவிடம் ரஷ்யா மேற்கொண்டிருந்தது.

ஆனால் தற்போது அமெரிக்காவை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் “நேட்டா“ அமைப்பில் பழைய சோவியத் யூனியனில் இருந்த சில நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இதற்கு ரஷ்யா தொடர்ந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. கிழக்கு நாடுகளுடன் ஆயுதம் தொடர்பான விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படக் கூடாது. அப்படி செயல்படுவது ஒப்பந்தத்திற்கு எதிரானது. மேலும் இது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனத் தொடர்ந்து புடின் தனது எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்.

இப்படி அமெரிக்கா கிழக்கு நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கருத்துக் கூறப்படும் அதே வேளையில் ரஷ்யாவின் சர்வாதிகாரத்தில் இருந்து விடுபட்டு தங்களுடைய சொந்த நாட்டின் இறையாண்மையை காப்பதற்காகவே பல நாடுகள் நேட்டாவை நாடியிருக்கின்றன என்றும் மற்றொரு சாரார் கருத்துக் கூறி வருகின்றனர்.

ஏன் உக்ரைன் முதன்மையாது?

உக்ரைன் தனது எல்லைகளின் ஒரு பகுதியை ஐரோப்பிய நாடுகளுடனும் மற்றொரு பகுதியை ரஷ்யாவிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் உக்ரைனில் இன்றைக்கு வரைக்கும் ரஷ்யா கலாச்சாரம் வேரூன்றி இருப்பதாகவும் அதன் கிழக்குப் பகுதிகளில் ரஷ்யாவின் பூர்வக்குடிகள் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி கலாச்சாரம் அடிப்படையில் ஒன்றிணைந்து காணப்படும் உக்ரைன் ரஷ்யாவுடன்தான் இணைந்திருக்க வேண்டும் என்று பரவலான கருத்து நிலவி வருகிறது.

ஆனால் உக்ரைன் நாட்டு மக்கள் ஜெலன்ஸிக்கு முன்பு ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம் ஏற்கனவே ரஷ்யா கடந்த 2014 இல் கிரிமியாவை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. மேலும் அதைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இருக்கும் இரண்டு மாகாணங்களில் தங்களுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களை உருவாக்கி வைத்துக்கொண்டு அவ்வபோது அப்பகுதிகளில் கலவரங்களையும் தூண்டிவருகிறது. இப்படி ஏற்பட்ட கலவரங்களினால் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்தை ரஷ்யா தற்போது இனயழிப்பு என்ற வார்த்தைகளினால் குறிப்பிட்டு காட்டிவருகிறது. மேலும் உக்ரைனில் தொடர்ந்து இனயழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அங்குள்ள இராணுவத்தை ஒடுக்க வேண்டும் என்று போர்க்காலத்தில் பரப்பும் அடிப்படைவாதகக் கருத்துகளை கூறிவருகிறது.

உண்மையில் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிகத்தை ஒடுக்கி உக்ரைன் தற்போது அந்த பகுதிகளை மீண்டும் தன்னுடைய நாட்டுடன் இணைந்துக் கொள்ளவும் தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சித்து வருகிறது.

இதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரெஷென்சோ ரஷ்யாவுடன் மின்ஸ்க் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தார். அதன்படி ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு கிழக்குப் பகுதிகளை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் இதற்கான முயற்சிகளை எடுத்துவரும் பட்சத்தில் ரஷ்யா அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதிகளைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது.

மேலும் கிழக்குப் பகுதிகளில் முறைப்படியான தேர்தலை நடத்தாமல் உக்ரைன் தனது நாட்டுடன் அப்பகுதிகளை இணைத்துக் கொள்ளக்கூடாது என ரஷ்யா எச்சரிக்கிறது. இதுகுறித்து பேசிய உக்ரைன், ரஷ்யாவின் பிடியில் இருக்கும் கிழக்குப் பகுதிகளில் இயல்பாகத் தேர்தலை நடத்த முடியாது. ரஷ்யாவின் பிடியை தகர்த்திவிட்டுத்தான் அங்கு தேர்தலை நடத்த முடியும் என நம்பி அதற்காக உக்ரைன் நேட்டாவின் துணையை நாடவும் முயற்சித்தது.

இந்த முயற்சியைத்தான் தற்போது ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. காரணம் ஏற்கனவே பழைய ரஷ்யாவில் இருந்த பல நாடுகள் நேட்டா அமைப்பில் இணைந்துவிட்டன. தற்போது ரஷ்யாவிற்கு மிக அருகில் இருக்கும் உக்ரைனும் அந்த நேட்டா அமைப்பில் இணைந்துவிட்டால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடும் என்றும் ஏற்கனவே ஒப்பந்தத்தை முறியடித்து மேற்கத்திய நாடுகள் கிழக்கு நாடுகளுடன் ஆயுதப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நேட்டா ரஷ்யாவிற்கான பாதுகாப்பினை உறுதிச் செய்யவில்லை என்று உக்ரைன் மீது போரைத் தொடுத்திருக்கிறது.

பழைய ஒப்பந்தத்தை மீறியதற்காகத்தான் இந்த போர் எனக் கூறப்படும் அதே வேளையில் ரஷ்யா மீண்டும் தனது வலிமையை உலக நாடுகளுக்கும் நேட்டா அமைப்பிற்கும் காட்டுவதற்காகத்தான் நடத்தி வருகிறது என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

காரணம் ரஷ்யா உக்ரைன் மீது 5 ஆவது நாளாக முன்னோக்கி நகர்ந்து வருகிறது. ஒரிரு நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ரஷ்யா இழுப்பதற்கு காரணம் உலக நாடுகள் மத்தியில் ரஷ்யா தனது வலிமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் இந்தப் போரை உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிரான போர் மட்டுமல்ல மேற்கு உலக நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளில் முதன்மையாக இருந்துவரும் ரஷ்யாவிற்கும் எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. வலிமையான நாடுகள் யார்? என்ற முரணனான பதத்திற்கு உலகத் தலைவர்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். இதில் அப்பாவி மக்கள் கண்ணீர் வடித்து வருவதே வாடிக்கையாக இருந்துவருகிறது.