'தங்கலான்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ’தங்கலான்’ திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தை தடை செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’தங்கலான்’ திரைப்படத்தில் புத்த மதத்தை புனிதமாகவும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாகவும், இப்படம் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு முடிந்தால் தான் ’தங்கலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.