நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தமிழக பெண்களுக்கு கொடுக்காதது ஏன்? நீதிபதிகள் வேதனை
- IndiaGlitz, [Tuesday,March 12 2019]
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பேருந்து ஒன்றில் ஐவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது. தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நிர்பயாவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை செய்ய பிரதமரே முன்வந்து உதவினார். நிர்பயா சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தபோது நாடே அந்த ஒரு பெண்ணுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. நிர்பயாவுக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நிர்பயா போல் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஊரகப்பகுதியில் பாதிக்கப்படும்போது அந்தந்த மாநிலத்தில் உள்ள ஊடகங்களே பெரிய அளவில் முக்கியத்துவம் தருவதில்லை.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொழுந்துவிட்டெரியும் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தேசிய ஊடகங்களும் மகளிர் அமைப்புகளும் கண்டுகொள்ளவே இல்லை என்பதே பலருடைய ஆதங்கமாக இருந்தது. இதனை இன்று ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.
இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், 'டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஊடகங்கள் ஊரக பகுதிகளை புறக்கணிக்கின்றன என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.