'விவேகம்' படத்திற்கு ஏன் இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள்
- IndiaGlitz, [Sunday,August 27 2017]
கோலிவுட் திரையுலகில் வெளியாகும் படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது, குத்தாட்ட பாடல், நாயகியின் கவர்ச்சி உடை, கெட்ட வார்த்தைகள் ஆகியவை அனைத்தும் அல்லது இவற்றில் சில இல்லாமல் படம் வெளியாகுவது மிகவும் அரிதாக உள்ளது. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் குடும்பத்துடன் பார்த்தால் கூட நெளிய வைக்கும் காட்சிகள் இல்லாமல் இருக்கும் 'விவேகம்' படத்திற்கு ஏன் இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் என்பது ஆச்சரியமாக இருப்பதாக நடுநிலை சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் ஒருசில காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருப்பதும், அஜித் புராணம் கொஞ்சம் அதிகம் இருப்பதும் உண்மைதான். ஆனால் அதற்காக இந்த படத்தில் பாசிட்டிவ் காட்சிகளே இல்லை என்பது போல் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த விமர்சனங்களை படத்திற்கான விமர்சனமாக இல்லாமல் அஜித் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாகத்தான் பார்க்க முடிகிறது.
அஜித் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வதில்லை, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதில்லை, எந்த ஒரு சமூகவிரோத சம்பவங்களுக்கும் குரல் கொடுப்பதில்லை என்ற கோபத்தை ஒருசில ஊடகங்கள் இந்த விமர்சனத்தின் மூலம் வெளிக்காட்டுவதாகத்தான் எண்ண தோன்றுகிறது. 'விவேகம்' படத்தில் அஜித் மட்டும் கடுமையாக உழைக்கவில்லை. கேமிராமேன், கலை இயக்குனர், எடிட்டர், ஸ்டண்ட் இயக்குனர்கள் உள்பட பல தொழில்நுட்ப கலைஞர்களின் உண்மையான உழைப்பு இருப்பதை மனதில் கொண்டு அவர்களுக்காக விமர்சனத்தை நடுநிலையாக செய்திருக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.