அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது ஏன்? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருவது தெரிந்ததே. நயன்தாரா சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அஜித் படங்களில் பெரும்பாலும் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. அப்படி இருந்தும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க நயன்தாராவை படக்குழுவினர் அணுகியபோது அவர் இந்த படத்தின் கதை என்ன, தன்னுடைய கேரக்டர் என்ன? என்பது குறித்து எதுவுமே கேட்கவில்லையாம். இது படக்குழுவினர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. அதுமட்டுமின்றி நீங்கள் கேட்கும் தேதியை அட்ஜெஸ்ட் செய்து கொடுக்கின்றேன் என்றும் உறுதி அளித்தாராம். மேலும் சம்பளம் குறித்து கூட அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இதற்கெல்லாம் ஒரே காரணம் அவர் அஜித் மீது வைத்திருக்கும் மரியாதை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்

அஜித்துடன் நயன்தாரா ஏற்கனவே 'பில்லா', 'ஏகன்' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக அஜித் படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது.