'மெய்யழகன்' ட்ரிம் செய்யப்பட்டது ஏன்? இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்..!
- IndiaGlitz, [Tuesday,October 01 2024]
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் நேற்று முதல் 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ட்ரீம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றங்களே வினா...
மாற்றங்களே விடை
அன்பிற்குரிய என் மக்களுக்கு..,
அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.
எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை.
சூர்யா அண்ணா, கார்த்தி BROTHER, ராஜசேகர் SIR(2D), சக்தி அண்ணா (SAKTHI FILM FACTORY) என அனைவரும், முதல் சந்திப்பு முதல் இன்று வரை என்னை அரவணைத்து, முழு படைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள்.
எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள்.
இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள்.
அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும்.
எப்போதும் பேராதரவு அளிக்கும் ஊடக மற்றும் பத்திரிக்கை அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்பே இறை
அன்பே நிறை
அன்பே மறை
அன்பே அருட்பெரும் மெய்