பூரண மதுவிலக்கை அமல்படுத்தவே மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ளோம்..! அமைச்சர் தங்கமணி.
- IndiaGlitz, [Saturday,February 08 2020]
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் மூலம் கிடைக்கும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி என்பது குறித்துத் தெரிவித்துள்ளார்.
மதுபானங்கள் விலை அக்டோபர் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகும், பீர் வகைகள் விலை 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகும் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். அதுவே எங்களின் கொள்கை. அதே நேரத்தில் தற்போதைய சூழலில் பல்வேறு விஷயங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. ஆகவேதான் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளதால் தமிழக அரசுக்குக் கூடுதலாக 2,500 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களை செயல்படுத்த முடியும்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.