எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து ஏன் விவாதம் எழுப்பப்படுகிறது???

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

 

கொரோனா நிவாரண நிதிக்காக, மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு 30 விழுக்காடு குறைத்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக பல அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் தாங்களாக முன்வந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி அடுத்த 2 வருடங்களுக்கு ஒதுக்கப்படாது என்ற அறிவிப்புத்தான் தற்போது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்பிக்களின் தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியும் மக்களின் நிவாரணத்திற்குத் தான் பயன்படுத்தப்படும். தற்போது கொரோனா நடவடிக்கையின்போதும் மக்களின் மருத்துவக்கட்டமைப்புக்குத்தான் செலவுசெய்யப்படும். இப்படியிருக்கும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றன எனப் பல தரப்புகளில் இருந்து சந்தேகங்கம் எழுப்பப்படுகிறது.

தமிழக அரசும் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி யை, கொரோனாவை எதிர்க்கொள்ள செலவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பு நேரடியாக தொகுதி எம்எல்ஏக்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ வசதி மேம்பாட்மை உயர்த்துவதற்குப் பயன்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பின்படி, எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது முழுவதுமாக மத்திய அரசால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இதில் இருந்து வேறுபடுகிறது.

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படாமல், இந்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும் தொகை ரூ.7,900 கோடியாக இருக்கும் எனத் தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது இந்தியாவில் கொரோனா பாதிப்பை எதிர்க்கொள்ள மத்திய அரசால் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் தற்போதுள்ள முக்கிய பிரச்சனை அடுத்த இரண்டு வருடத்திற்கு எம்பிக்களுக்கும் அவர்களது தொகுதிக்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும் என்பதுதான். தொகுதிக்கான மேம்பாட்டு நிதியை ஒதுக்கும்போது ஒவ்வொரு தொகுதியிலும் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், நீர் போன்ற அத்யாவசிய மேம்பாடுகள் மீள்கட்டமைப்பு செய்யப்படும். இப்படி நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆக்கப்படும்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியாவில் அனைத்துப்பகுதிகளும் உள்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்படாமல் போகும் அபாயம் ஏற்படலாம். மத்திய அரசு இந்தியா முழுவதும் அனைத்துத் தொகுதிகளுக்கும் எந்த வேறுபாடும் இன்றி ஒரே அளவில் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக முன்வைக்கப்படும் கேள்வி, மாநில அரசின் சார்பாக அனுப்பப்படும் எம்பிக்களின் நிதி நிறுத்தப்படும் போது ஒவ்வொரு தேவைக்காகவும் மாநில அரசுகள் முழுவதுமாக மத்திய அரசை நாடியே இருக்கவேண்டிய அபாயம் வரலாம். மேலும், இது ஒரு சிலரால் அதிகாரத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு எனவும் விமர்சிக்கப்படுகிறது.

தற்போது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியால் பல உள்கட்டமைப்பு, மருத்துவ மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது நிறுத்தப்படும்போது அந்த கடைக்கோடி தொகுதிக்கு மீண்டும் அந்த நிதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் கிடைக்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுதோறும் ரூ.576 கோடியாக இருக்கிறது. இதே அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இழப்பீடு ஏற்படும். இதுவரை கிடைத்து வந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தி வந்தன. இந்தப் பற்றாக்குறையை எப்படி சரிசெய்வது என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.