ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது ஏன்? வெற்றிவேல் பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Wednesday,December 20 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த ஒருவருடமாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அவரது மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷனும் விசாரணை செய்து வருகிறது
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
இந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போன்ற 6 நொடி காட்சி உள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல் கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் ஜெயலலிதா வீடியோ வெளியானதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டது சசிகலா, தினகரனுக்கு தெரியாது.
மேல்சிகிச்சைக்கு ஜெ.வை எங்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும் என்னிடம் உள்ளது. அவற்றை தேவைப்பட்டால் வெளியிடுவேன். மேலும் விசாரணை ஆணையம் கேட்டால் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை கொடுப்போம். வெளியிடப்பட்ட வீடியோ ஜெயலலிதா தீவிர சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும் நாங்கள் விடமாட்டோம். ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவதால் வீடியோவை வெளியிட்டேன். ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் விசாரிக்க வேண்டியது பன்னீர்செல்வத்திடம் தான்' என்று வெற்றிவேல் கூறியுள்ளார்.