இந்தியை எதிர்த்தாலும் இந்தி படத்தை ரிலீஸ் செய்வது ஏன்? உதயநிதி விளக்கம்
- IndiaGlitz, [Sunday,August 07 2022]
இந்தி திணிப்பை திமுக ஒரு பக்கம் எதிர்த்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தி படத்தை ரிலீஸ் செய்வது ஏன் என்ற கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா என்ற இந்தி திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று லால் சிங் சத்தா பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் திமுக இந்தி திணிப்பை எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் இந்தி படத்தை ரிலீஸ் செய்தால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவருமே? என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். திமுக இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறது என்றும் இந்தி படிக்க வேண்டாம் என்று ஒரு நாளும் சொல்ல வில்லை என்றும் கூறினார். இந்தியை நீங்கள் விரும்பினால் தாராளமாக படித்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று தெரிவித்தால் அதை திமுக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு நல்ல படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதால்தான் லால் சிங் சத்தா ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் முதலில் இந்தி படத்தை மட்டுமாவது விட்டுவிடலாம் என்றும், தமிழ் மட்டும் பண்ணலாம் என்று தான் இருந்தேன். ஆனால் அமீர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் படமே பார்க்காமல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய நான் ஒப்புக் கொண்டேன் என்றும், அவரது படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.