விஜயகாந்தை சந்தித்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்
- IndiaGlitz, [Friday,February 22 2019]
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் பூரண குணமாகி சென்னை திரும்பிய நிலையில் அவரை பல்வேறு தலைவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, அல்லது திமுக அணியில் இணைந்து போட்டியிட வாய்பு இருப்பதாக கூறப்படுகிறது. இக்கட்சியின் தலைவர்கள் இரண்டு அணி தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்தை அவருடைய சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்தார். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் விஜயகாந்தை ரஜினி சந்தித்திருப்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது: இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது! சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் என்று கூறினார்.
இந்த சந்திப்பில் அரசியல் கிடையாது என்று ரஜினி கூறினாலும் இந்த சந்திப்பில் அரசியல் பின்னணி இருக்கக்கூடும் என்றே கூறப்பட்டு வருகிறது.