தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து. பின்னனி இதுதான்
- IndiaGlitz, [Monday,March 27 2017]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். திரையுலகினர் உள்பட அனைத்து துறையினர்களும் இந்த போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆதரவு கொடுத்தனர்
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் நெடுவாசல் மக்களின் சம்மதம் இன்றி இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று மத்திய அரசு உறுதிமொழி கொடுத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக 31 நிறுனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த திட்டத்தை ஜெம் லெபாரெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுத்தும் என ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கொடுத்த வாக்குறுதியையும் மீறி மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது நெடுவாசல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் ஜெம் லாபரடரீஸ் நிறுவனம் கர்நாடகத்தைச் பாஜக ராஜ்யசபா எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. பாஜக எம்பியின் சொந்த நிறுவனம் லாபம் பெற, தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர்.