இந்த 3 நோய் பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மேலும் பாடாய் படுத்துகிறது ஏன்??? மருத்துவக் காரணம்!!!
- IndiaGlitz, [Friday,April 17 2020]
கொரோனா நோயாளிகளை வைரஸ் கிருமிகளிடம் இருந்து மீட்பதற்கு மருத்துவ உலகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு தீவிரசிக்கிசை தேவைப்படுவது இல்லை. அதிலும் இளம் வயதுடைய பலருக்கு சிகிச்சை தேவைப்படாமல் வெறுமனே தனிமைப்படுத்தலில் குணமாகிவருகிறார்கள். ஆனால் வயதான நபர்களின் நிலைமையே வேறு. வயதானவர்களுக்கு தீவிரச் சுவாசக்கோளாறு முதற்கொண்டு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு தீவிரச்சிகிச்சை தேவைப்படும் நிலையில் மருத்துவ உலகம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வயதானவர்களிலும் இதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்று பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா மேலும் பாடாய் படுத்திவிடுகிறது.
தற்போதுள்ள உணவுபழக்க முறைகளாலும் வாழ்வியல் முறைகளாலும் 50 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure), இருதயநோய் போன்ற பாதிப்புகள் இருக்கின்றன. இப்படி நோயினால் பாதிக்கப்படுபவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை இல்லை. தொடர் சிகிச்சையில்லாமல் மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ளாமல் இருக்கும் நபருக்கு மேலும், கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டால் நிலைமை மோசமாகி விடுவதாகத் தற்போது மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே உடலில் உள்ள பாதிப்புகளால் இதயத்துக்கு சரியான விகிதத்தில் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதனால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டால், முற்றிலுமாக இதயத்துக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் எளிதாக குழைந்துவிடும் அபாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இப்படி அவதிப்படுபவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கையாக சுவாசம் செலுத்தப்படுகிறது. என்றாலும், செலுத்தப்படும் ஆக்சிஜனை முறையாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்களது இதயத்தின் நரம்புகளுக்கு வலிமை இருக்கிறதா என்பதைப் பொறுத்தும் தன்மை வேறுபடுகிறது.
இதயநோய் மட்டுமில்லாமல் பெரும்பாலான ஆண்கள் புகை, குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அடிமையாகி இருக்கின்றனர். இத்தகைய பழக்கம் உள்ளவர்களாக இருந்து, வயதிலும் மூத்தவர்களாக இருக்கும்போது பாதிப்பு இரட்டை மடங்காக உயருகிறது. அவர்களின் ரத்தக்குழாய்களில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு நிலைக்குலைந்து இருக்கும்போது கொரோனா நோய்த்தொற்றும் பற்றிக்கொண்டால் ரத்தக்குழாய்களில் ரத்தம் அப்படியே உறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. இப்படி ரத்தக்குழாய்களில் ரத்தம் உறையும்போது எளிதாக மாரடைப்புத் தோன்றி ஆளை சாய்த்துவிடுகிறது. இதில் கொரோனாவின் பங்கைவிட ஏற்கனவே உடலில் இருக்கும் நோயின் பங்கே அதிகமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தன்னிடமுள்ள ACE2 புரத்தை வைத்துக்கொண்டு மனிதச் செல்லுக்குள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்துவிடுகிறது. இப்படி நுழையும்போது மனித செல்களில் உள்ள Memory cell அலாட்டாகி அவற்றை எதிர்ப்பதற்கு தயாராகிவிடும். இது சாதாரண மனிதனிடம் காணப்படும் நிகழ்வு. இதுவே புகைப்பிடிக்கும் நபராக இருக்கும்பட்சத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர் பெரும்பாலும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாசத் தடை நோய் (COPD) போன்ற கோளாறுகளால் அவதிப்பட்டு கொண்டிருப்பார். இவர்களைப் போன்று புகைப்பழக்கம் இல்லாமலும் சிலர் சுவாசப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பர். இவர்களின் சுவாசக்குழாய்களில் இருக்கும் பாதைகள் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருக்கும் நேரத்தில் கொரோனா நோய்த்தொற்று இவரது செல்களை ஏமாற்றி நுரையீரலை மிக எளிதாக அடையலாம். ஏனெனில் இத்தகைய தன்மையுடைய நபர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதையில் பாதிப்புகள் இருக்கும். அதனால் பெரும்பாலும் நுரையீரல் செல்களில் காணப்படும் memory cell கள் உறங்கிகொண்டிருக்கும். பூட்டு இல்லாத வீடுபோல நுரையீரல் பாதிப்புள்ளவர்களின் நுரையீரலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ்கள் சுவாசத்தை தடைப்படுத்தும். அத்தகைய நிலைமைகளில் வென்டிலேட்டர்கள் அவசியமாகிறது.
இதுதவிர மேலும் ஒரு அபாய நிலை இருக்கிறது. சுவாசப்பாதையில் கொரோனா நோய்த்தொற்று பரவி அவர்களின் சுவாசத்தை கொரோனா வைரஸ் தடுத்து நிறுத்தினால் ஒருபக்கம் நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிரான நோய் எதிர்பபு சுரப்பிகளை (சைட்டோகைன்) சுரக்க ஆரம்பிக்கும். இப்படி சுரக்கும் சைட்டோகைன் ரத்ததில் உள்ள கொரோனா வைரஸ்க்கு ஏற்ற அளவு சுரந்தால் நோயாளி தப்பித்தார். அப்படியில்லாமல் தேவைக்கு அதிகமாக சைட்டோகைன் சுரக்கும் பட்சத்தில் மேலும் அவர் நோயால் பீடிக்கப்படுவார். புகைப்பழக்கத்தால் சுவாசப்பாதைகள் பாதிக்கப்பட்டு, தற்போது கொரோனாவால் மேலும் நிலைமை மோசமாகி இருக்கும்போது இந்த சைட்டோகைன்கள் சுரப்பிகளை சுரந்து சுவாசப்பாதையை ஒருவழி பண்ணிவிடுகிறது. இப்படி நிலைகுலைந்த சுவாசப்பாதைகளை எளிதாக சரிசெய்ய முடியாமல் பலர் இறந்துபோகின்ற கொடூரங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது.
அடுத்ததாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கொரோனாவால் மோசமான அனுபவத்தை பெறுகின்றனர். பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புதிதாக வைரஸ் போன்ற பாதிப்பு ஏற்படும்போது அது ரத்தத்தில் மேலும் சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இந்தபாதிப்பினால் கொரோனா போன்ற வைரஸ் கிருமித் தொற்று ஏற்பட்டவும் கடுமையான நிமோனியா போன்ற உடல் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டிவருகிறது. ஏற்கனவே உடலில் இருக்கு பாதிப்புகளை எதிர்த்து அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் கடுமையான போராட்டத்தை நடத்திகொண்டிருப்பதால் கொரோனா வைரஸ்க்கு எதிராக அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் வேகமாக செயல்பட முடியாமல் போய்விடுகிறது. முதலில் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடைஏற்பட்டு அடுத்ததாக மூளை, கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் சுவாசக்காற்று செல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் (Multi organ) உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. இப்படி கொரோனா ஆபத்தில் வயது, ஏற்கனவே உள்ள நோய் போன்றவை எமனாக இருந்து நோய்த்தொற்றை அதிகப்படுத்துவதில் ஆற்றல் பெற்றுவிடுகின்றன. இதற்கு எதிராக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றாலும் தீவிரத் தன்மைநேரத்தில் இந்த ஆய்வுகள் பலனளிப்பதில்லை என்பதே கொடுமை.