எளிதில் உடல்எடையை குறைக்கும் ஆண்கள்… பெண்களால் ஏன் முடிவதில்லை?
- IndiaGlitz, [Wednesday,August 04 2021]
உடல்பருமன் என்பது இன்றையக் காலக்கட்டத்தைப் பொறுத்த வரைக்கும் பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது. அதிலும் கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளேயே நம்மில் பலர் முடங்கிக் கிடப்பதால் உடல்எடை அதிகரித்து அதை குறைப்பது எப்படி எனக் குழம்பிப்போய் இருக்கிறோம்.
இந்நிலையில் உடல்பருமனைக் குறைக்கும் விஷயத்தில் பெண்களைப் போன்று ஆண்கள் அதிகமாகச் சிரப்பட தேவையில்லை என்று மருத்துவக் குறிப்பு கூறுகிறது. இதைத்தவிர உடல்எடை கூடும் விஷயத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த மருத்துவ ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அடிப்படையில் சில இயற்கை காரணங்களால் பெண்களைவிட ஆண்களுக்கு உடல்எடை விரைவாகக் குறைகிறது. இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டு அதிக உடல்எடையை வைத்திருக்கும் ஆண்கள் மிக எளிதில் உடல்எடையைக் குறைத்துவிட முடியும்.
மேலும் ஆண்களுக்கு ஒருமுறை உடல்எடை குறைந்துவிட்டால் அவ்வளவு எளிதில் மீண்டும் உடல்எடை அதிகரிக்கும் தன்மை இருப்பதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதோடு ஒருமுறை குறைத்துவிட்ட உடல்எடை மீண்டும் கூடிவிடவும் செய்கிறது.
இதனால் எடல்எடை குறைப்பு விஷயத்தில் பெண்கள், ஆண்களில் இருந்து ஏன் வித்தியாசப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். உடலில் தங்கும் கொழுப்பானது ஆண்களுக்கு வயிற்றுப்பகுதியில் தங்குகிறது. ஆனால் பெண்களுக்கு இடுப்பு, வயிறு மற்றும் தொடை எனப்பல பகுதிகளில் கொழுப்புகள் தங்கி அவர்களின் உருவத்தோற்றத்தையே மாற்றிவிடுகிறது.
இதனால் ஒருமுறை கூடிவிட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு பெரும் சிரப்பட வேண்டும். மேலும் 35-40 வயதுள்ள பெண்களுக்கு இதுபோன்ற உடல்எடை கூடும் பிரச்சனை சாதாரணமாகவே இருக்கிறது.
எனவே உடலைக் குறைக்க உடற்பயிற்சி, வொர்க் அவுட், ஸ்கிப்பிங், நீச்சல், நடைப்பயிற்சி எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். இந்நிலையில் உடல்குறைப்பின்போது ஆண்களுக்கு மிக விரைவாக உடல்எடை குறைந்து போகிறது. பெண்களுக்கு இதுவே நீண்டகாலம் தேவைப்படுகிறது.
இதற்கு ஆண்களிடம் காணப்படும் மெல்லியச் சதைகள்தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மெல்லிய தசைகள் அதிகம் கொண்ட ஆண்களுக்கு மெட்டபாலிசமும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் ஆண்களைப் பொறுத்தவரை உடல்குறைப்பு என்பது எளிதாகிறது.
பொதுவாக பெண்கள், ஆண்களைவிட 6%-11% வரை அதிக எடையுடன் காணப்படுவதாக மருத்துவ ஆய்வு சுட்டுகிறது. இந்நிலையில் பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனும் அவர்களின் எடைக்குறைப்பு விசயத்தில் பெரும் சதிக்காரனாகவே இருந்து வருகிறது. அதாவது பெண்களிடம் அதிகளவில் காணப்படும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி உணவுக்குப் பிறகு கலோரிகளை எரிக்கும் தன்மையை குறைத்து உடல்எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடு அதிகமாக இருப்பதால் பெண்கள் பலரும் உடல்எடை அதிகரித்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் பெண்களுக்கு உணவின்மீது இருக்கும் ஈர்ப்புத் தன்மையும் உடல்எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்களால் உணவின்மீது இருக்கும் ஈர்ப்பை குறைத்துக் கொள்ள முடியவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதோடு பெண்கள் அதிகளவில் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதும் அவர்களின் உடல்எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
எனவே ஆணோ, பெண்ணோ தங்களது உயரத்திற்கு ஏற்ப உடல்எடையை வைத்திருப்பது அவசியம். இதனால் பொரித்த உணவுகள், துரித உணவுகள், இனிப்பு வகைகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.
மேலும் பிராய்லர் கோழி, ஃப்ரைடு ரைஸ் போன்ற ஜங் உணவு வகைகளை உட்கொள்ளும்போது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நீர்க்கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இதனால் பெண்கள் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆண்களுக்கும் இந்த குறிப்பு பொருந்தும் என்றாலும் பெண்களுக்கு இது பெரும் ஆபத்தாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.