Mr.ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை எடுக்காததற்கு என்ன காரணம்… ரகசியத்தை உடைத்த சிஇஓ!
- IndiaGlitz, [Tuesday,February 15 2022] Sports News
சின்னதல, மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்த சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தற்போது தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் இந்தப் பதில் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகப் போட்டிகளில் விளையாடியவர், அதிக ரன்களை குவித்தவர் எனப் பல சாதனைகளைப் படைத்திருக்கும் சுரேஷ் ரெய்னாவை சென்னை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை ரசிகர்கள் இணையத்தில் அலசி வருவதோடு சிஎஸ்கேவிற்கு எதிராக ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஒவ்வொரு அணியும் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்யவே நினைப்பார்கள். சுரேஷ் ரெய்னா இல்லாமல் விளையாடுவது கடினம்தான். ஆனால் தற்போதுள்ள அணிக்கு அவர் பொருந்தி வரமாட்டார். ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள் எதிர்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்வார்கள். அதற்கான பொருத்தத்துடன் ஏலத்தில் எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
காசி விஸ்வநாதன் தெரிவித்த இந்தக் கருத்திலிருந்து ஃபார்ம் அவுட் ஆனதால்தான் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய வீரர், 204 போட்டிகளில் 55,28 ரன்களை அடித்த வீரர் என்ற அடிப்படையில் அவரைத் தேர்வு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் சிஎஸ்கே அணி மூத்த வீரர்களை மட்டுமே தேர்வு செய்து விளையாடியது. மேலும் சில இளம் வீரர்களை சிஎஸ்கே அதிகவிலை கொடுத்து வாங்கினாலும் கடைசிவரை அவர்களுக்கு களத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. இப்படியிருக்கும்போது சிஎஸ்கேவிற்கு 25 வீரர்கள் தேவையா?. இந்த இளம் வீரர்களுக்கு ஒருவேளை களத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவர்களுடைய எதிர்காலம் என்னாவது எனப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் சிஎஸ்கே மீது வீசிவருதுவம் குறிப்பிடத்தக்கது.