தென்னிந்தியாவில் பாஜகவின் யுக்தி எடுபடாதது ஏன்?
- IndiaGlitz, [Friday,May 24 2019]
நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலின் முடிவுகளை வட இந்தியா, தென்னிந்தியா என பிரித்து பார்த்து ஆய்வு செய்தால் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியா பாஜகவை புறக்கணித்துள்ளதும், ஒட்டுமொத்தமாக வட இந்தியா பாஜகவை வரவேற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் மட்டும் பாஜக 25 தொகுதிகளை பெற்றுள்ளது. ஆனால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. மற்றபடி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் இருந்து பாஜகவின் உத்தி தென்னிந்தியாவில் எடுபடவில்லை என்ற உண்மை தெரியவருகிறது. குறிப்பாக தென்னிந்திய மக்கள் மத ரீதியிலான பிரச்சாரத்தை விரும்புவதில்லை. இந்துவுக்கும் இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் என்பதும் கடவுள் பக்தி இருந்தாலும் கடவுளையும் அரசியலையும் பிரித்து பார்ப்பவர்கள் தென்னிந்தியர்கள் என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.