நேற்றே ஜாமீன் கிடைத்தும் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,December 14 2024]
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்று மாலை ஜாமீன் கிடைத்தும், இரவும் முழுவதும் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அன்று, அல்லு அர்ஜுன் ஐதராபாத் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, உடனடியாக அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தரப்பில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதனால் நேற்று இரவு 8 மணியளவில் அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறை அதிகாரிகளுக்கு முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால், அவரை உடனே வெளியே விட அதிகாரிகள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் ஜாமீன் ஆவணங்கள் இன்று காலை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து, காலை 7 மணியளவில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது சிறை வாசலில் ஏராளமான அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கூடியிருந்ததால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.