ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களைக் கண்டு அலறும் அதிகாரிகள்… மீன் பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பாகவே ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களுக்கு தடை விதித்தது. ஆனாலும் சில இடங்களில் இந்த வகை கெளுத்தி மீன்கள் விதிமுறை மீறி வளர்க்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரியின் பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பண்ணைகளில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 26 ஆம் தேதி வெளியான ஒரு செய்திகுறிப்பில், கிருஷ்ணகிரியின் தென் பெண்ணை ஆற்றங்கரை ஒட்டிய பாகலூர் ஆவலப்பள்ளி, சென்னசந்திரம், பூதி நத்தம், ஆளூர், கொடியாளம் ஆகிய பகுதிகளிலும் ஓசூர் அருகே சில பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளே குற்றம் சாட்டி இருந்தனர். அதற்கான விசாரணையைத் தற்போது மீன்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளைக் கொட்டி ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அருகே உள்ள இடங்களில் துர்நாற்றம் அடிப்பதாகவும் இந்த மீன்களை சாப்பிடும்போது உடலுக்கும் கேடு விளைவதாகவும் சில அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களுக்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? அதை சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. காரணம் இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை. மேலும் இந்த மீன் கழிவுநீர், ரசாயன கழிவுநீர், குளம், குட்டை உள்பட எந்தவித தண்ணீரிலும் வாழுத் தன்மை கொண்டது. நிலத்திலும் கூட இரண்டு நாட்கள் இவ்வகை மீன்கள் உயிர் வாழுமாம். மேலும் இந்த மீன்கள் ஒரே நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான முட்டைகள் இடும் தன்மைக் கொண்டவை.
இதனால் தன்னுடைய அதீத தேவைக்காக ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் நாளடைவில் தான் வாழும் நீர்நிலையில் உள்ள அனைத்து உயினங்களையும் அழித்துவிடுகிறது என அதிகாரிகள் எச்சரித்து உளளனர். இந்தக் காரணங்களால்தான் இந்த வகை மீன்களை வளர்ப்பதற்கு அரசு தடைவிதித்து இருக்கிறது. மேலும் இந்த வகை மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அபாயகரமான உலோகங்கள் இருப்பதால் இதை உணவாக உட்கொள்ள வேண்டாம் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை செய்கிறது. இதனை உணவாக உட்கொள்வோருக்கு தோல் வியாதிகள் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நம்முரிலும் கெளுத்தி எனும் ஒருவகை மீன் இருக்கிறது. இது ஆறு, குளங்களில் அதிகமாக வாழும் தன்மைக் கொண்டது. கறுப்பான நிறத்தில் இருக்கும் மீசை வைத்த இந்த மீன்கள் மிருதுவான தன்மையுடன் காணப்படும். அனால் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், மீசையோடு சேர்ந்து வழுவழுப்பாகவும் நீளமாகவும் கருமை மற்றும் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. விரைந்து வளரும் தன்மை கொண்ட இந்த வகை மீன்கள் பொதுவாக வழுவழுப்புத் தன்மை மிகுந்து அதிகக்கொழுப்புடன் இருக்கும். எனவே கொழு கொழுவென இருக்கும், அதுவும் விலை குறைந்த மீன்கள் என்றால் வாங்குவதற்கு முன்பு அதுகுறித்து விசாரணை செய்வது மிகவும் அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments